கல்வியின் பயனும் பிடி தோய் மலையும்

Taken from K.V.Jagannathan's book on Anuboothi
இறைவன் அருளை லட்சியமாக கொள்ளாத கல்வி யாவும் போலி கல்வியே. கல்வி இறைவனோடு சார்தற்குரிய நெறிகளை தெளிவிக்க வேண்டும். இல்லையாயின் அது கல்வி ஆகாது. மனத்தை ஒருமைப்படுத்தி நல்ல நெறியில் செலுத்தி நடுநிலையில் நிற்கும்படி செய்வதே கலையும் கல்வியும். கலை பயிற்சியால் மனம் செருக்கும் கலக்கமும் அடையுமானால் அந்த கல்வி தீங்கானதே.

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

"கலையானது பதற்றம் கொண்டு பயனற்ற ஆரவாரம் செய்து தலை கிறுகிறுத்து அலையும் படி உள்ள ஒன்றாகி விடலாமா? சமயவாதிகளுடன் வாதம் செய்து பிணக்குதல்செய்து சாஸ்திர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி அப்படிப்பட்ட வாத பிரதிவாதத்தில் நான் சிக்கலாமா? கொலையே விரும்பி செய்யும் வேடர் குலத்தில் பெண் யானையை போல வளர்ந்த வள்ளிநாயகி அணைந்த மலை போன்ற பெருமாளே! கிரௌஞ்ச மலையைப் பல கூறாகப் பிளந்த வெற்றி மாலை சூடிய முருகா!!"

பிடிதோய் மலை

வள்ளிநாயகி மலை மேல் வளர்ந்தவள். பெண் யானையை போல காடும் புனமும் கலந்த சூழலிலே வளர்ந்த பெருமாட்டி தனக்கு ஏற்ற மலையை நாடி முருகன் திருத்தோள் மலையை அணைந்தது. வள்ளி வளர்ந்த மலை கொடிய கொலையை செய்ய அஞ்சாத வேடர்கள் வாழும் மலை. தனக்குரிய இடம் வேறு மலை என்று அறியாமல் இந்த வேடர் மலையே தன் இடமென்று மயங்கி வேடர் மகளாக வாழ்ந்து வந்தாள். பிரபஞ்ச வாசனையில் அழுந்தி நிற்கும் ஆன்மா அந்த வாசனையினின்று நீங்குவது எளிதல்ல.பிரபஞ்சமென்னும் சேற்றில் அழுந்தியவன் தானே முயன்று தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. அந்த சேற்றில் அகப்படாத முருகன் வள்ளியை வேடர் குடியிருந்த மலையிருந்து விடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான். அதன் பின்பு அந்த பிடி முருகன் என்னும் மலையில் தோய்ந்து இன்புற்று விளையாடுகிறது.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே