Saturday, 3 March 2018

அழுதும் ஆ ஆ என - விரிவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune

For an English version of the paraphrase of this song, click azhuthum avaavena

சோணாசலத்தின் ஞானச்சுடரே சரணம். "அழுதும் ஆ ஆ எனத் தொழுதும் " எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல்.

முன்னுரை

மிகச் சிறந்த வேண்டுதல்களைச் செவ்வேளிடம் வைக்கும் அருணகிரிநாதரின் பக்குவ நிலையைப் இதில் பார்க்கிறோம். விதண்டா வாதம் செய்யும் மதவாதிகளால் என்றுமே புரிந்து கொள்ள முடியாத புனிதமான பக்தி நிலை கேட்கிறார். மாசு மருவற்ற தெளிந்த ஞானம் கேட்கிறார். கர்ம வினையால் திரும்பத் திரும்ப பிறவிச் சுழலில் சுற்றிச் சுற்றி வந்து களைப்பதோ, எனக் கதறுகிறார். சரவணப் பொய்கையில் தவழ்ந்து, அறுவர் அமுதம் உண்ட ஆறுமுகமே அனைத்திற்கும் மேற்பட்ட மெய்ப்பொருள் என்ற உன்னத உணர்வில் திளைக்கிறார்.

Wednesday, 28 February 2018

விராலிமலை முருகன்

மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு 20 கிமீ முன்பாக அமைந்திருக்கிறது. தற்போது சிறு நகரமாக மாறிவிட்ட விராலி மலை முன்னர் வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
இந்த முருகன் மருத்துவ முருகனாம்! முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படும் இக்கோயில் மயில்களால் சூழப்பட்டு மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? மூலவர் சண்முகநாதன். அம்மன் வள்ளி தேவசேனா இருவருமாவர். திருவண்ணாமலையைப் போல, இதுவும் ஏராளமான சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த/ வாழும் பூமி. விராலிமலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் அரும் பெரும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.

Tuesday, 27 February 2018

இருவர் மயலோ - பதவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune.

Read here the meaning in English for the song Iruvar mayalo

"இருவர் மயலோ" என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆதி முதற் பொருளாக, அண்டமெலாம் வியாபித்து நிற்கும் விஸ்வரூபனாக, பூத நாயகனாக, முருகனைக் கண்டு மலைக்கும் அருணகிரியாரின் பரவச நிலை சொல்லும் பாடல். முருகனிடம் முறையிடும் வழிமுறைகள் பற்றிய கேள்வி ஞானம் கூட இல்லாத தன் குரல் அவனுக்கு எட்டுமோ எனக் கேள்வி எழுப்பும் அதே நேரம், அவன் கடாட்சம் தன் மேல் படாததற்குக் காரணம், அவன் கவனம் தன் இரு தேவியரிடமே நிலைப்பது தானோ, என நயம் படக் கேட்கும் உரிமையுள்ள தூய பக்தராக அருணகிரியாரைப் பார்க்கிறோம்.

Friday, 23 February 2018

வேல்மாறல் பாராயணம்

You may read the Vel Vaguppu post for the meaning in English. Here's the Tamil explanation of the same.

வேல் மாறல் மகா மந்திரமாகும். அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு என்ற திருவகுப்புகள் உடல் நோயையும், உயிர்ப்பிணியையும் நீக்கவல்ல மணி, மந்திர, ஒளஷதம் போன்றதாகும் என்கிறது வேல் வழிபாடு குறித்த விளக்க உரை.

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல்லுக்கு ‘வெல்’ என்பது மூலம். வெல்லும் தன்மையுடையது வேல். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

வேல், வினைகளை வேரறுக்க வல்லது. வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று உறுதி கூறிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார்.

Friday, 16 February 2018

சுந்தரரின் தோழரும், அருணகிரி நாதரும்

You can read here the story of Paravai Nachiyar in English
"பரவைக்கு எத்தனை" என்று தொடங்கும் பொதுப் பாடலில், தன் அடியார்களுக்காக எதையும் செய்யத் தயங்காத மாண்பு கொண்டவர் அந்த மகாதேவன் என்பதையும், சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பனாகவே தன்னை ஆக்கிக் கொண்டவர், கந்தனின் தந்தை என்பதையும் பாடிப் பரவசம் ஆகிறார் அருணகிரியார்.

"பரவைக் கெத்தனை விசை தூது
பகரற்கு உற்றவர் மாண் "

ஒரு பெரிய புராணத்தையே உள்ளடக்கிய வரிகள். உரிமையால் பக்தன் உத்தரவிட, கருணையால் அதைச் செய்து முடிக்கும் பரமன். பாசமும் நேசமும் இருவருக்கும் பாலமிடும் எழிற் கோலம். பழைய சிவ அடிமை சுந்தரர் ப்ராரப்தம் முடித்து முக்தி பெற எடுத்த பிறவி. சிவபக்தைகள் இருவர், பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து, சுந்தரரைக் கை பிடிக்கக் காத்திருக்க, இறைவன் திருவருளால் இகபர சுகம் பெற, திருவாரூரில் பரவையையும், திருவொற்றியூரில் சங்கிலியையும் மணம் புரிந்து கொள்கிறார் வன் தொண்டர் சுந்தரர்.

Thursday, 15 February 2018

இலாபமில்

The song ilabbamil is explained in English here : 195.Ilabamil
The explanation in Tamil has been posted by Smt Janaki Ramanan, Pune.

விராலிமலையில் தான் அருணகிரிநாதருக்கு எத்தனை, எத்தனை இனிய ஆன்மீக அனுபவங்கள்! சிவ அம்சங்கள் அத்தனையும் உள்ளடக்கி, சிவ ஸ்வரூபனாகவே தரிசனம் தந்து விளையாடுகிறான் வேலவன். சிவ பாலனாகவும் காட்சி தருகிறான். எந்த ரூபத்தில் வந்தாலும் ஆட்கொள்ளும் பரம்பொருள் அவன் தான் எனச் சரவணனைச் சரண் அடைகிறார் அருணகிரியார். முதல் பகுதி காட்டுவது, சிவன் அம்சமும், முருகன் அம்சமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் , "சத்" எனும் சத்திய தரிசனமோ! இரண்டாம் பகுதி, மங்கல ஸ்வரூபனாக, சிவபாலனாகக் காட்சி தரும் "சித் " எனும் ஞானமோ! மூன்றாம் பகுதி முருகனை ஆனந்த மயமாகக் காணும் நிலையோ! மொத்தத்தில் அவன் சச்சிதானந்தனே தானோ, என எண்ண வைக்கும் ஆன்மீக விளக்கு.

விளக்கவுரை


இலாபமில் பொலாவுரை சொலா மன தபோதனர்
இயாவரும் இராவு பகல் அடியேனை

விளக்கம்

விராலிமலைக்கு என்னை ஈர்த்து வந்த காந்தமே கந்தா ! எப்படி எப்படியோ இருந்த என்னை முற்றிலும் புதியவன் ஆக்கி விடு. பொய்மையோ, வீண் வார்த்தைகளோ பேசி அறியாத தவ ச்ரேஷ்டர்கள், இந்த ஏழையைப் பற்றி எப்பொழுதும், எப்படி எல்லாம், நல்ல விதமாகப் பேச வேண்டும் என்ற என் ஆசையை, ஆதங்கத்தை, உன்னிடமன்றி யாரிடம் சொல்வேன் ஐயா?

Tuesday, 13 February 2018

கரிபுராரி காமாரி - ஒரு விளக்க உரை

Posted By Mrs. Janaki Ramanan, Pune.
You can refer to the song and its meaning : karipurari

'கரிபுராரி காமாரி' என்று தொடங்கும் விராலி மலை பாடலில் – முன் பாதி தந்தையின் புகழ். பின் பாதி எந்தையாம் முருகனின் புகழ் – என்று பாடிப் பரவசம் அடைகிறாரோ அருணகிரி நாதர்! பாடலின் முன் பகுதி சிவனின் தனித்தன்மையை, தத்துவத்தை, அருமையைப் பெருமையை, வலிமையை, யோக நிலையின் சிறப்பை, ஞானத்தின் ஜொலிப்பைச் சொல்கிறது. இரண்டாம் பகுதி வேலவனின் வீரத்தை, தீரத்தை, அவதார நோக்கமாம் சூர சம்ஹாரத்தைச் சொல்லி, அவன் மறக்கருணையையும் அறக்கருணையையும் சொல்கிறது. முக்தி வாசல் திறப்பவன் முருகன் என்று உறுதி அளிக்கும் பாடல். வரிக்கு வரி, தேன் சிந்தும் சந்தத்தில் அமைந்த பாடல்.